
தென்காசி மாவட்டம் நல்லூரில், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 ஆசிரியர்கள் மற்றும் 4 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடமும் மனு அளித்த பின்னரும், சம்பளம் வழங்கப்படாத நிலையில், பள்ளி முடிந்த பின்னர் பள்ளி வளாகம் முன்பு ஆசிரியர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

