
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதல் திருமணத்திற்கு சுஷ்மிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருமணத்துக்குப் பின் சிவகாமிபுரம் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் ஆகாஷும் சுஷ்மிதாவும் வசித்து வந்தனர். ஆகாஷ் தோட்டங்களில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்து ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேலஅரியநாயகிபுரத்திலிருந்து சுஷ்மிதாவின் தந்தை முருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆகாஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஆகாஷின் தலை மற்றும் கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், தனது மகள் சுஷ்மிதாவையும் முருகன் அரிவாளால் வெட்டியுள்ளார். தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதும், முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த ஆகாஷ் மற்றும் சுஷ்மிதா ஆகிய இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஷ்மிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படும் முருகனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.