
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கோவிந்தபுரா பகுதியில் ராகுல் ஜா அவரது மனைவி கீதா ஜா மற்றும் 3 மகள்களும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது கீதா ஜா மற்றும் அவரது 3 மகள்களும் செங்கலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், இந்தக் கொலையை ராகுல் ஜா செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும், 4 பேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவான ராகுல் ஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
