
ஹைதராபாத் வாடி-ஏ-முஸ்தஃபா பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கஞ்சா போதையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து, அங்கிருந்த தங்க நகைகளை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது, கஞ்சா போதை அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் திருடிய வீட்டிலேயே தூங்கியுள்ளார். இதையடுத்து, வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் அலமாரி திறக்கப்பட்டு உடைமைகள் கலைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் அலமாரின் கீழ் அந்நிய நபர் தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை சோதனையிட்டபோது, அவரது பாக்கெட்டில் வீட்டின் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இச்சம்பவத்தை வீட்டின் உரிமையாளர்கள் தங்களது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு போலீசார் விசாரணை செய்தபோது பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சம்பவத்தின் போது அவர் தீவிர கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

