
மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் ( DSPCA )

கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட விதிகள் உள்ளன ஆனாலும் பணத்தை சேமிப்பதற்காக கால்நடை வியாபாரிகள் மூன்று வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டிய கால்நடைகளை ஒரே வாகனத்தில் ஏற்றுவது மட்டுமின்றி கால்நடைகளுக்கு போதிய உணவு , தண்ணீர் , முதலுதவி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொண்டு செல்கின்றனர்.

இது போன்ற கால்நடைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் ( DSPCA ) என்ற பெயரில் கால்நடை பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2003- ம் ஆண்டு முதல் செயல்படுவதாக கூறப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் கடந்த 2009- ம் ஆண்டு ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என பதிமூன்று நபர்கள் நியமிக்கப்பட்டு தற்போது ஒன்பது நபர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கு காவல்துறை வனத்துறை போன்ற சட்ட அமலாக்கத்துறைகளுக்கு இணையான சீருடைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இவர்களை தொடர்புகொள்ள தனியாக தொடர்பு எண்களோ தனி அலுவலகமோ இல்லை. அதுமட்டுமல்லாது பறிமுதல் செய்யப்படும் விலங்குகள் , சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் விலங்குகள் என எந்த ஒரு விலங்குகளையும் பராமரிக்க இடமும் இல்லை. இதுவரை ஆவணங்களில் தவிர இவர்களிடம் எந்த ஒரு விலங்குகளும் பறிமுதல் செய்வதும் இல்லை பராமரிப்பதும் இல்லை.
பல்வேறு விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வரும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த விலங்குகள் வதை தடுப்பு சங்க செயல்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் வெறும் ஆவணங்களில் மட்டும் செயல்படும் இந்த சங்கத்தை எதற்காக மாவட்ட நிர்வாகம் நிர்வகித்து வருகிறது என்று தெரியவில்லை என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
எனவே வருவாய் துறையினரும் காவல்துறையினரும் இதுபோன்ற விலங்குகளை கொண்டுசெல்லும் வாகனங்களை தணிக்கை செய்து சட்ட விதிகளை மீறி கொண்டுசெல்லப்படும் கால்நடை வாகனங்களையும் பாதிக்கப்பட்ட கால்நடைகளையும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.