


திண்டுக்கல்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும்போது, “கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மீன்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளது. தற்போது சாதி மீனுக்கு கிலோவிற்கு ₹35-மும், சிலேபி மீனுக்கு ₹17-மும் மட்டுமே வழங்கி வருகின்றனர். ஆனால், மீன்பிடிக்கப் பயன்படும் வலைகளின் விலை ₹400-லிருந்து ₹1200 ஆக உயர்ந்துவிட்டது. கடுமையான விலைவாசி உயர்வுக்கு மத்தியில், இந்த சொற்ப கூலியை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.
ஒரு கிலோ மீனுக்கு ₹50 வரை உயர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும், மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பிடித்துக் கொடுத்த மீன்களுக்கான நிலுவைக் கூலியையும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
கூலி உயர்வு குறித்து நியாயம் கேட்கச் சென்றால், மீன்பிடிக்கும் பணியை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், கையோடு இடைநீக்க (Suspension) உத்தரவைக் கொடுத்து அச்சுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரமின்றி முடங்கியுள்ளது.
தற்போது அணையில் நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில், தொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் நீரில் உள்ள மீன்கள் செத்து மடியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, தங்களுக்கு நியாயமான கூலி உயர்வை வழங்கி, நிலுவைத் தொகையை மீட்டுத் தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.