
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்ததார். இதை தொடர்ந்து சிலரிடம் மட்டும் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர் சென்றுவிட்டதாக முகாமுக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற முகாம்களில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
தற்போது மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கான பதில் பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டதால், பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்த தங்களுக்கு ஏமாற்றமாக இருந்ததாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை முறையாக கிடைப்பதில்லை என்றும், அரசு சார்பில் வழங்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கான நேர்காணல் நடைபெற்றும் இதுவரை வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அங்கேயே உரிய தீர்வு காண்பதே குறைதீர்க்கும் முகாமின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய முகாம் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மனு அளிக்க வந்தவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாததால், மனுக்களை பதிவு செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக கூறிய அவர்கள், வரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
