தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தல்சூர் கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முனிராஜ். இவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று புகுந்துள்ளது. மேலும், அந்த தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி மற்றும் போர்வெல் அமைப்புகளை அடித்து நொறுக்கிய அந்த யானை, தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. இதனை தொடர்ந்து மாதக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொளுத்தும் மழையிலும் இரவு பகலாகப் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் ஒரே இரவில் யானையின் தாக்குதலால் அழிந்துபோனதைக் கண்டு விவசாயி முனிராஜ் வேதனை அடைந்தார். தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதையடுத்து யானை ஊடுருவலைத் தடுக்க வனத்துறையினர் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயி முனிராஜிற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


