செய்திகள்

தூத்துக்குடி : பேருந்து நடத்துனர் தற்கொலை முயற்சி – பணிமனை மேலாளர் மீது குடும்பத்தினர் புகார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தூத்துக்குடியில் இருந்து ஏரல் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 16-ஆம் தேதி காலை, ஓட்டுநர் ராம்குமார் மற்றும் நடத்துனர் ஆறுமுகம் தூத்துக்குடி பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது ஏரல் அருகே பேருந்து தாமதமாக வந்ததாகக் கூறி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேருந்தை ஆய்வு செய்தார். பின்னர், பேருந்து தாமதம் தொடர்பாக தூத்துக்குடி பேருந்து நிலைய பணிமனை மேலாளர் சுரேஷிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பேருந்து தூத்துக்குடி பணிமனைக்கு வந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பணிமனை மேலாளர் சுரேஷ் விசாரணை நடத்தினார். அப்போது, இருவரையும் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் பணிக்கு சென்ற ஆறுமுகத்திடம் பணிமனை மேலாளர் சுரேஷ் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், அவரது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாக பேசியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஆறுமுகம், பணிமனையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், அங்கிருந்த சக ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, பணிமனை மேலாளர் சுரேஷ் மீது ஆறுமுகத்தின் குடும்பத்தினர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button