
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் பல குடும்பத்தினர் பரம்பரையாக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், பகல் நேரங்களில் நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள், இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் தங்குவது வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை மாடுகளைத் தேடியபோது, வினோத், மாலா, புஷ்பா, அம்பிகா, ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு சொந்தமான 6 மாடுகள் காணாமல் போனது தெரிய வந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடைப்படையில் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் மாடுகளை திருடிச் செல்வதும், பின்னர் அவற்றை மூடப்பட்ட வேனில் ஏற்றி கொண்டு செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மாடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.