
வேலூர் மாவட்டம், மராட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக் கட்டிடங்கள் மோசமடைந்த நிலையில், 10 மாதங்களுக்கு முன்பு அவை இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து, மாணவர்களுக்கு தகர சீட்டுகளால் அமைக்கப்பட்ட வாடகைக் கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அணைக்கட்டு–ஒடுகத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, புதிய பள்ளிக் கட்டடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
