
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, அவரது தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் அண்ணாதுரை என தெரிவித்துள்ளார்.
தனது எழுத்தாற்றல் மற்றும் மேடைப் பேச்சால் மக்கள் மனதில் இடம்பிடித்த அண்ணாதுரை, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதுடன், மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணாதுரை எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் உள்ளிட்ட அண்ணாதுரையின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.



