
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது வேட்டைக்காரன்குளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்குள்ள ஆற்றுப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், பேருந்தில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆற்றுப் பள்ளத்தில் சிக்கியுள்ள அரசு பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
