
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 16 முதல் 20-வது வார்டுகளில் கடந்த 3 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மழை குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில், சுமார் 16 முதல் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் சசிதேவ், ராஜா, மாதேஷ், சிவராமன் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர் முகமது சபீர் ஆலம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு மாமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், பொது அளவில் மழை இல்லாததால் ஓசூர் மாநகராட்சி 5 வார்டு பகுதிகளில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 4,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. சுமார் 16,000 முதல் 20,000 வரை பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யவும், கூடுதல் டிராக்டர் மூலம் தினசரி தண்ணீர் வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ள பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.



