
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் நேற்று விவசாயிகள் பாசன அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, திருமூர்த்தி அணை பாசனத்தை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை காலங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும்.
மேலும், நிதி ஒதுக்கப்பட்ட பிறகு பணிகளை தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

