
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற ஆம்னி பேருந்துகளை ஓசூரில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர்.
வட்டார போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் மற்றும் துணை போக்குவரத்து ஆணையர சம்பத்குமார் தலைமையில், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா, அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த அதிரடி சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. பின்னர், அந்த பேருந்துகளுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சோதனையின் போது சில ஆம்னி பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், கர்நாடகாவுக்கு செல்ல முடியாமல் அவர்கள் ஓசூர் மற்றும் எல்லைப் பகுதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில பயணிகள் வாடகை வாகனங்களில் கர்நாடகாவுக்கு சென்ற நிலையில், மற்ற பயணிகள் தங்களது ஆம்னி பேருந்துகள் எப்போது புறப்படும் என்ற எதிர்பார்ப்புடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில் தொடரும் விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை ஈடுபட்டனர்.

