
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது காரில் குற்றாலம் சென்று விட்டு சிவகாசி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிவகாசியில் இருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா செல்வதற்காக 13 பேர் கொண்ட குழுவினர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக விஜய் ஆனந்த் ஓட்டி வந்த காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் நொறுங்கியதுடன், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இந்நிலையில், வேனில் இருந்த 13 பேரும் அலறியடித்துக் கொண்டு வெளியே இறங்கி உயிர் தப்பினர். இதையடுத்து, 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காருக்குள் சிக்கிக் கொண்ட விஜய் ஆனந்த், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த தீ விபத்தில் கார் மற்றும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


