
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசக்தி. இவர் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 2 அறைகள் தரைமட்டமானதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனமும், தீயில் எரிந்து நாசமானது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் போது, மாடசாமி என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


