
தென்காசி மாவட்டம் ஆசாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை. இவர் வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வெடிப்பொருட்களை தயாரித்து வருகின்றார். அப்பொழுது, வெடி பொருட்களானது வெடித்து திடீரென பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமானதுடன், வீட்டில் இருந்த வெடி பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்துள்ளது. இதனால் அருகாமையில் இருந்த 8 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பாலசவுந்தர்யா, கீர்த்திகா ஆகிய 2 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக வெடி பொருட்கள் தயாரித்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.