க்ரைம்

கிருஷ்ணகிரி : ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கிய சுற்றுச்சூழல் அதிகாரி உட்பட மூவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டி கிராமத்தில் குவாரி நடத்தி வருபவர் பிரதாப். இவர் குவாரியை விரிவுபடுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக, கடந்த மாதம் 20-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக ஓசூர் தர்கா பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பொறியாளர் புருஷோத்தமனை, கடந்த 22-ம் தேதி பிரதாப் அணுகியுள்ளார். அப்போது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகையை வழங்க முடியாது என பிரதாப் கூறியதையடுத்து, ரூ.5 லட்சம் குறைத்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என பேரம் பேசப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.3 லட்சத்தை வழங்க பிரதாப் சம்மதித்துள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை பிரதாப்பிடம் கொடுத்து, அதிகாரியிடம் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, பணத்தை வழங்குவதற்காக பிரதாப் புருஷோத்தமனை அணுகியபோது, சேலத்தில் உள்ள இடைத்தரகர் சிவக்குமாரிடம் பணத்தை வழங்குமாறு அவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பிரதாப் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, தான் ஓசூர் வந்துவிட்டதாகவும், தனது உதவியாளர் முருகனிடம் பணத்தை கொடுக்குமாறும் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சேலம் 5 ரோடு சந்திப்பில் பிரதாப், முருகனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முருகனை பிடித்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், இடைத்தரகர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் முருகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button