
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் பாபநாசம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால் வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் கருகி வருவதுடன், கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் ஒரு குடம் ரூ.15 வரை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குளத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து மனு அளித்தனர். பாபநாசம் அணையில் இருந்து கோரம்பள்ளம் குளத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை கேட்ட அமைச்சர், 10 நாட்களுக்குள் நேரில் வந்து ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


