
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் பகுதியை நோக்கி விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. இதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இதையடுத்து, கப்பல் ஜாவா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கப்பல் கடலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவலறிந்ததும் இந்தோனேசிய கடலோரக் காவல் படை மற்றும் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் தத்தளித்த 102 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், மாயமான 140 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து படகுகள் மூலம் கடல் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கப்பல் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

