
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி, கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சுவருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனை அடுத்து, சுவருக்கான பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம் எனவும் தெரிவித்தனர்.



