
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு திருக்கோவிலில் வேதபாராயணமும், திருமுறை பாராயணமும் விண்ணைப் பிளக்கும் வண்ணம் முழங்கின. அந்த மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத இரண்டாம் கால யாகசாலை பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்புத் திரவ்யாகுதி மற்றும் பூர்ணாாகுதி ஹோமங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. பின்னர், சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாள் மற்றும் சண்முகர்க்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து இறைவனின் திருவருளை பெற்றனர்.

