
தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சுமார் 250 வீடுகள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாகவும், அதிக உப்புத்தன்மையுடனும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை பெண் காவலர் ஒருவர், போராட்டக்காரர்கள் கொண்டு வந்த தண்ணீரை வாங்கிக் குடித்துப் பார்த்தார். தண்ணீர் அதிகளவில் உப்பாக இருந்ததால், உடனடியாக அதைத் துப்பினார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கலங்கலாகவும், உப்பு நீராகவும் இருப்பதால், அதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், குடிநீர் தேவைக்காக ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

