
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம்பட்டி பகுதியில் திண்டுக்கல்–பழனி நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் 3 பேர் அரிவாளுடன் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கும் நிலையில், அவர்களில் ஒருவர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு அதைச் சுற்றியபடி செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நெடுஞ்சாலையில் ஆயுதத்தை வெளிப்படையாகக் காட்டியபடி சென்ற இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையாகக் கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, திண்டுக்கல் மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


