
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வரும் அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது.
இதை தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துகளுடன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். தவெக உள்ளிட்ட எந்தக் கட்சிகள் போட்டியிட்டாலும், தொகுதி மக்களை திமுக ஏமாற்றாது. எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுக வெற்றி பெறும் என்றார். நாளை அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
செப்டம்பர் 19-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும் என்று கூறினார்.

