
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மாநகராட்சி அனுமதியுடன் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் 20 அடிக்கும் மேல் ஆழமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென மணல் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த சில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் மட்டும் மணலில் சிக்கிக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி பூமிநாதனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி பணிகள் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
