
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சுமார் 457 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில், மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. சங்கல் தோப்பு தர்கா கமிட்டி தலைவர் நவாப், மஸ்தாணி அம்மா மற்றும் பாபு ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தர்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு துவா மற்றும் பாத்தியா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாதி, மத வேறுபாடின்றி பங்கேற்ற பொதுமக்கள், நோய் நொடிகள் இன்றி அனைவரும் நலமுடன் வாழவும், நல்ல மழை பெய்து ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, சுமார் 2 டன் மைதா மாவைப் பயன்படுத்தி 50 ஆயிரம் புரோட்டாக்கள் தயாரிக்கப்பட்டு, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், தர்கா கமிட்டி செயலாளர் ஹாஜி கோஸ் சாஹாப், துணைத் தலைவர் ஜாவித், பொருளாளர் அதாவுல்லா, மீசைக்காரன் அமானுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 457 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் 50 ஆயிரம் புரோட்டாக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
