
திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிடுவதாக மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்துக்கொண்டு மேலும் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும் அவ்வாறு தரவில்லை என்றால் தங்கள் நிறுவனத்தைப் பற்றி போலியாக செய்திகள் பதிவிட்டு நிறுவனத்தை மூடி விடுவோம் என்று மிரட்டியது தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக போலி பத்திரிக்கையாளர்களான செட்டிநாயக்கன்பட்டி சிவபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்(49), திண்டுக்கல், கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர்(47) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டி பணம் பறிக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமார்

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்கள்,
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை.