
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினர் 20 பேருடன் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் கோவிலுக்குச் செல்வதற்காக வேனில் பயணம் செய்தனர். அதே நேரத்தில், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் காரில் குற்றாலத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கழுகுமலை சாலையில் எதிரெதிர் திசையில் வந்த கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



