திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள முளையூரைச் சேர்ந்தவர் சின்னகருப்பன் (70). விவசாயியான இவர், மலைப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எர்மநாயக்கன்பட்டி பிரிவில் சாலையைக் கடக்க முயன்றபோது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சின்னகருப்பன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் இருந்து மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சின்னகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.