க்ரைம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு – விவசாயிகள் எச்சரிக்கை



திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில் இருந்து தொடங்கி 201 கி.மீ. நீளத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. அந்த வாய்க்காலில் ஆண்டுக்கு இருமுறை விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து வழக்கமாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய மழையின்மையால் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடைமடை பகுதியான முத்தூருக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் விவசாயிகள் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு இடங்களில் மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் சட்டவிரோதமாக திருடப்படுவது தெரியவந்ததது. இது குறித்து புகைப்படம், வீடியோ ஆதாரங்களுடன் காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, தண்ணீர் திருட பயன்படுத்தப்படும் மோட்டார், குழாய்களை பறிமுதல் செய்து, மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.












Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button