
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ரவுடி கோபி என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சென்று ஆனந்தராஜ் என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 15 பேரை கைது செய்தனர். இதனை தோடர்ந்து, தலைமறைவாக இருந்த கோபியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோபி நெய்வேலி புலவன்குப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கோபியை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் பாண்டியராஜன் மற்றும் விஜயலயசோழன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கோபியின் காலில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து, காயமடைந்த கோபி மற்றும் போலீசார் ஆகிய மூவரும் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
