
வடமாநிலங்களில் கனமழை மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கங்கை ஆற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பீஹார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பீஹாரில் மட்டும் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அதனை சுற்றியுள்ள சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பிற பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல 1,429 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படையின் 27 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனை தொடர்ந்து, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு பீஹாரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், தாழ்வான பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் மாநில நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், பீஹாரில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான அளவை விட 55 சதவீதம் அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


