
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மகன் அஜித் . இவர் சொகுசு விடுதி நடத்தி வந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் வாலிபால் மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிலருக்கும் அஜித்துக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தகராறு முற்றிய நிலையில், நான்கு பேர் கொண்ட கும்பல் அஜித்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தகவலறிந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பத்திற்கு முன்விரோதம் காரணமா அல்லது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


