
தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று காலை, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் பெரிய பைகளுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த சோதனையில், அவர்கள் கொண்டு வந்த பைகளில் சிறு சிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்ட 11.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகாரைச் சேர்ந்த சந்தின் குமார் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு அந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கி அதனை சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் வழியாக கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடமிருந்து 11.2 கிலோ கஞ்சா போதைப்பொருள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தலில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.