
தூத்துக்குடி மாவட்டம் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயிலேறி. இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குடியிருப்பில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டின் பாதுகாப்புப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அருகே, அவர் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மயிலேறி சென்ற வாகனம் மீது மோதிய விபத்தில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சண்முகநாதன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


