
ஆந்திரப் பிரதேசம் பாபட்லா மாவட்டம் சீராலா பகுதியில் காவலர் சசிகுமார், ஆதிநாராயணபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது ஜாலம்மா என்ற முதியவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது முதியவர் வீடுகளில் துப்புரவுப் பணி செய்து செய்து பிழைப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆய்வாளர், லத்தியை ஓங்கி மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் வீட்டின் எதிரே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாபட்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமாமகேஷ்வர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சீராலா டிஎஸ்பி மொயினுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.
