செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – விசாரணை அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 230 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 69 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என 24 பேரை கைது செய்தனர். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை அமைத்து, விஷ சாராயம் குடித்து பாதித்தவர்கள், அவர்களது குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறை, வருவாய் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து கோகுல்தாஸ் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளச்சாராய விற்பனைக்கு பெயர் போன பகுதிகளில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கடமை தவறிய செயல்பாடுகள் இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராபாளையம் வட்டங்களில் பணியாற்றிய வி.ஏ.ஓ.க்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெத்தனால் உள்ளிட்ட பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட திரவங்கள் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்காததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவத்திற்குப் பின்னரும், 2024-ம் ஆண்டு கள்ளச்சாராய சம்பவம் நடைபெறும் வரை அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button