க்ரைம்
Trending

சேதமடைந்த வனசாலை – வர தயங்கும் சுற்றுலா பயணிகள் – நிதி ஒதுக்கியும் சாலைப்பணிகள் நடைபெறாமல் நிறுத்திவைப்பு

திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சிறுமலை மலைப்பகுதி தொடங்குகிறது . சிறுமலை ஊருக்குள் செல்வதற்கு பதினெட்டு கொண்டையூசி வளைவுகளுடன் அருமையான இயற்கை காட்சிகளை கண்டுகொண்டே செல்லும் வகையில் சாலை வசதி உள்ளது. இந்த சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழையூர் புதூர் தென்மலை பசலிக்காடு தாளக்கடை குரங்கு பள்ளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பலா, வாழை, எலுமிச்சை, சவ்சவ் , அவரை , பீன்ஸ் , முந்திரி ,மிளகு , காபி அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. வேறு எங்கும் காணப்படாத பல்வேறு அரியவகை மூலிகைகள், தாவரங்கள், மரங்கள் இங்குள்ளன .

வன உயிரின பாதுகாப்பு பட்டியல் ஒன்றில் உள்ள காட்டுமாடு , சருகுமான் , கடமான் , கேளையாடு , மலை அணில் வகைகள் , தேவாங்கு உட்பட பல்லவேறு அறிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக இந்த மலைப்பகுதி இருந்து வருகிறது.

இதுமட்டுமல்லாது அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள வெள்ளிமலை சிவன் கோவில் மற்றும் மலைக்குன்றின் அருகில் அமைந்துள்ள அகஸ்தியர் மடம் தென் இந்தியா முழுவதும் இருந்து சிவபக்தர்கள் வந்துசெல்லும் முக்கிய இடமாக உள்ளது.

இங்கு உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை துரையின் கீழ் இயங்கும் நாற்றுப்பண்ணையில் பலா , வாழை , மிளகு , முந்திரி உட்பட பல்வேறு அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதிலிருந்து வரும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு உள்ள தட்பவெட்ப நிலையால் கவரப்பட்டு திண்டுக்கல் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக வனத்துறை சார்பில் தென்மலையில் 120 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு ஜனவரி மாதம் (2026) திறக்கப்பட்டது.

நத்தம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சிறுமலை சாலையில் சிறுமலைபுதூர் நுழைவுப்பகுதி வரை உள்ள சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலும் அதன் பின்னர் உள்ள அகஸ்தியர்புரம் தென்மலை வழியாக பொன்னுருவி பகுதிக்கு செல்லும் சாலை முழுவதும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் , பராமரிப்பில் உள்ள சாலையாக இருந்துவருகிறது.

இந்நிலையில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் சிறுமலைபுதூர் முதல் தென்மலை வரை குண்டும் குழியுமாக  சாலை சரியான முறையில் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் பல்லுயிர் பூங்கா ஆரம்பிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கூடும் என நினைத்த நிலையில் தற்போது சாலை சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல்லுயிர் பூங்கா சுற்றிப் பார்க்க வரும் வழியில் சாலை சரியில்லை எனவும் பல கோடி ரூபாய் செலவு செய்து பூங்கா அமைக்கப்பட்ட போதிலும் சாலை சரியில்லாமல் வாகனங்கள் சேதமடைவதால் பூங்காவை பொதுமக்கள் பார்க்காமலே திரும்பி விடுவதாகவும் இதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்படைவதுடன் பல்லுயிர் பூங்கா வருமானமும் குறையும் என்றும் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button