
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் தனியாக வசித்து வந்த கணபதியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அத்து மீறி நுழைந்து, மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையின் அடிப்படையில், இச்ச்சம்பவத்தில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் கண்ணன் மற்றும் மேல கடையநல்லூரைச் சேர்ந்த வேலம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூதாட்டியிடம் பறித்துச் செல்லப்பட்ட 44 கிராம் தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன. விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளை மீட்ட கடையநல்லூர் போலீசாருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
