திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாக இன்று புதிய ஆலய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலின் மகா கும்பாபிஷேகப் பணிகளுக்காக கடந்த ஜனவரி 2025-ல் பாலஸ்தாபன விழா மற்றும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது கோயில் கோபுரங்கள் சீரமைத்தல், பிரகாரங்கள் மற்றும் மண்டபங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட மறுகட்டமைப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பணிகள் காரணமாக கருவறைப் பகுதிக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை வழிபட ஏதுவாக கோவில் திருமண மண்டபத்தில் அத்தி மரத்தினால் செய்யப்பட்ட கோட்டை மாரியம்மன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்று (28.08.26) ஆகம விதிமுறைகளின் படி சிற்ப சாஸ்திர முறைப்படி பிரம்மாண்ட கற்கோவிலாகக் கட்டப்பட்டு வரும் இத்திருக்கோவிலில், பௌர்ணமியும் சதய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, காலை 9:15 மணி முதல் 10:20 மணி வரையிலான துலா லக்னத்தில் யந்திரம் மற்றும் நவரத்தினங்கள் வைக்கும் மங்கள நிகழ்வுடன் புதிய கொடிமரம் முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கும்பாபிஷேகப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதால் நடப்பாண்டு மாசிப் பெருந்திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் தை மாதத்தில் வெகு விமரிசையாக நடத்தப்படவுள்ளது.


