
தூத்துக்குடியில் வில்வித்தை விளையாட்டில் சிறந்த இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு வில்வித்தை அசோசியேசன் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களில் வில்வித்தை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலாவது மாநில தென் மண்டல அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் 10 வயது, 11 வயது, 15 வயது, 18 வயது, 21 வயது மற்றும் சீனியர் என பல்வேறு வயது பிரிவுகளாக நடத்தப்பட்டன. மேலும், 15 மீட்டர் முதல் 70 மீட்டர் வரையிலான தொலைவுகளில் வில் அம்பு எய்தும் போட்டிகளும் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வில்வித்தை அசோசியேசன் மற்றும் தூத்துக்குடி வில்வித்தை சங்கம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.