செய்திகள்

பைனான்ஸ் நிறுவன அதிகாரி மிரட்டியதில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னமுத்தாலியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி லட்சுமம்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இவர் 25ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமம்மா நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஹரீஷ், ஓசூர் சீதாராம் பகுதியில் உள்ள மகேந்திரா பைனான்ஸ் மூலம் காரை தவணையில் வாங்கியுள்ளார். வாடகைக்கு இயக்கியதில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், கர்நாடகா மாலூரில் உள்ள தனது நண்பரிடம் காரை ஒப்படைத்ததாகவும், அவர் மாதந்தோறும் தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மகேந்திரா பைனான்ஸ் நிறுவன அதிகாரி ஹரீஷை செல்போனில் தொடர்பு கொண்டு தவணை செலுத்தாதது குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாகலூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவி முன்னிலையில் அவமானப்படுத்தி விடுவதாகவும், இதனால் மனைவி தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று நிறுவன அதிகாரி மிரட்டியதாக ஹரீஷின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஹரீஷ் வீட்டிற்கு சென்று தனது அறையின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஹரீஷின் சகோதரர் சீனிவாசன் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாக மனைவி தெரிவித்துள்ளார். தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ஹரீஷின் உறவினர்கள், தந்தையை இழந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவனை இழந்து நிற்கும் அவரது மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஹரீஷின் மனைவி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button