திண்டுக்கல் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருப்பது ஆர்த்தி தியேட்டர் சாலை. இந்த வழியாகத்தான் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மாவட்ட ஆசிய வளாக பகுதிக்கும் திருச்சி ரோடு கரூர் ரோடு போன்ற அடுத்த மாவட்ட சாலைகளுக்கு செல்லவும் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர் .
மேலும் திண்டுக்கல் நகரின் முக்கிய திரையரங்கம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவன அலுவலகங்கள் என எப்போதும் பரபரப்பாக இந்த சாலை காணப்படும் .
பல்வேறு முக்கிய பணிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தும் இந்த சாலை தினந்தோறும் போக்குவரத்து நெரிசலால் திண்டாடி வருகின்றனர்.
சாலையோர ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக இந்த சாலையில் மட்டும் அகற்றப்படவே இல்லை . மேலும் இந்த சாலையில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களில் வாகன பார்க்கிங் வசதி இல்லை . ஏற்கனவே சாலை மற்றும் நடைபாதை ஆகியவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்த சாலையிலேயே கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு சென்று விடுகின்றனர் .
இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் , பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் , அவசர வேலையாக செல்வோர் , ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தான் கடந்து செல்ல முடியும் .
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ள போதிலும் இந்த ஒரு சாலை மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வையில் படுவதில்லை என்றும் தற்போது உள்ள மாநகராட்சி ஆணையரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நேரடியாக நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே இந்த சாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.
