க்ரைம்
Trending

எங்கு பார்த்தாலும் மரம் வெட்டுதல், வனவிலங்கு வேட்டை—தமிழக வனப்பகுதிகளில் என்ன நடக்கிறது?

VILUPPURAM – KANDAMANGALAM

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதாகக் கூறி தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வழக்கம்போல் அந்நிய மரங்களை அகற்றுவதாகக் கூறப்பட்டாலும், தினந்தோறும் மரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வனத்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் சட்ட விதிகளை மீறி செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று மரங்களை வெட்ட சென்றதாகக் கூறப்படும் நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டு விரட்டி அதனை விடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அந்நிய மரங்களை வெட்டுகிறோம் என கூறி பல ஆயிரம் மரங்கள் இதுவரை வெட்டப்பட்டுள்ள நிலையில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள விகிதாசார அடிப்படையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படாமல் வன உயிரினங்களின் வாழ்விடங்கள் சுருங்கி வரும் நிலையில் கொடைக்கானல் வன கோட்டத்தின் மிக முக்கிய வன உயிரின வாழ்விட பகுதியில் சட்ட விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு மரங்களை மட்டும் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அடர்ந்த வன பகுதியில் உலா வரும் புலிகள் மரங்களை அகற்றுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களால் வேறு வழியில்லாமல் பேரிஜ பகுதியின் சாலைகளில் அவ்வப்போது தென்பட்டு வருகின்றன

மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் துறை ரீதியான ஆய்வுப்பணிகள் தவிர புகைப்படமோ வீடியோ பதிவுகளோ எடுக்க கூடாது என்றும் ஆய்வுப்பணிகளுக்காக எடுக்கப்படும் புகைப்பட விடியோ பதிவுகளைக்கூட பொதுவெளியில் வெளியிட கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில் மரம் வெட்ட சென்ற கும்பல் புலிகளை விரட்டி அதனை வீடியோ எடுத்து பொதுவெளியில் வெளியிட்டது எப்படி என கேள்வி எழுந்துள்ளது?

பேரிஜம் ஏரிப் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கொடைக்கானல் வனப்பகுதிகளில் நடைபெறும் மர அகற்றும் பணிகள், வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அங்கு நடைபெறும் அனைத்து பணிகளையும் மத்திய மாநில அரசுகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button