
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் தமிழகம் முழுவதும் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உப்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என உப்பள தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தூத்துக்குடி முடுக்குக்காடு பகுதியில், மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெண் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதையடுத்து, அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவும், கணவன்-மனைவி இருவரும் உப்பள தொழிலாளர்களாக இருந்தால் இருவருக்கும் நிவாரணம் வழங்கவும், உப்பள தொழிலாளர் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், குடிநீர், சுகாதார வசதிகள், மருத்துவ முகாம்கள் ஏற்படுத்துவதுடன், மழைக்கால நிவாரணத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




