

காந்நிகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மையத்தின் சார்பில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாடப்பட்டது. மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழக
க் கற்றல் மையத்தின் ஆசிரியை கே. எஸ். கௌரி அவர்களின் பிரார்த்தனைப் பாடலுடன்
நிகழ்ச்சி தொடங்கியது.
சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மையத்தின் இயக்குநரும் இந்தித் துறையின் தலைவருமான
டாக்டர் கந்தாரே சந்து லட்சுமன் வரவேற்றார்.
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் சமஸ்கிருதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் எஸ். ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,
வேதங்களும் இதிகாசங்களும் மனிதன் உண்மையாகவும் ஒழுக்கத்தோடும் சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கான விழுமியங்களை வகுத்துத் தந்திருக்கின்றன.
இராமாயணம் அதன் நாயகனான இராமனின் மூலமாகத் தாய் தந்தையரின் வாக்கிற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். இல்லறம் நல்லறமாக அமைய வேண்டும் என்பன போன்ற நல்ல ஒழுக்கங்களை நமக்கு வழங்குகிறது.
சமஸ்கிருத மொழி நன்கு கட்டமைக்கப்பட்ட மொழி. அதனை எவரும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொள்வதன் வாயிலாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும், என்றார்.
நுண்கலை மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் கே. கேசவ ராஜராஜன் நன்றி கூறினார்.
துணைவேந்தர் மற்றும் பொறுப்புப் பதிவாளர் இருவரும் நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சமஸ்கிருத நாள் விழா மிகவும் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைந்திருந்தது.
