
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருக்கு செலின் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். டிப்ளமோ இன்ஜினியரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மகேஷ்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைஎடுத்து, மகேஷ் குமாரின் உடல் சிங்கப்பூரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இதனிடையே, மகேஷ்குமாரின் உடலை செப்டம்பர் 2-ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகேஷ் குமாரின் தாயார் மாலதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்ததாகவும், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றதாகவும் தெரிவித்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மகேஷ் குமார் உயிரிழந்துவிட்டதாக சிங்கப்பூரிலிருந்து தகவல் கிடைத்ததாக கண்ணீர் மல்க கூறினார். எதற்காக எனது மகன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தனியார் நிறுவனம் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனது மகனின் உடலுடன், அவரது செல்போனையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். செல்போனை வழங்கினால்தான் உடலை பெற்றுக்கொள்வோம். எனது மகனின் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். மகேஷ்குமார் கொலைக்கான காரணம் என்ன, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யார், கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து சிங்கப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.